ADDED : ஆக 08, 2024 11:52 PM
பெங்களூரு: பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள கசகட்டாபூர், ராஜனுகுண்டே, பன்னர்கட்டா, கல்லுபாலு, கண்ணுார், கும்பலகோடு, அகரா, தாசனபுரா, அடகமாரனஹள்ளி மற்றும் பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் அன்னேஸ்வரா, ஜல்லிகே, தொட்ட துமகூரு, மஜரா ஒசஹள்ளி, சோமாபுரா, நந்தகுடி, சுலிபெலே ஆகிய கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் அதிக முறைகேடுகள் நடப்பதாக, லோக் ஆயுக்தா போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் சென்றன.
இதையடுத்து மேற்கண்ட 16 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும், நேற்று காலை 10:00 மணி முதல், லோக் ஆயுக்தா போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து திடீரென சோதனை நடத்தினர். அலுவலகங்களில் இருந்த, அனைத்து கோப்புகளும் சரிபார்க்கப்பட்டன. கோப்புகளை எப்படி பராமரிக்கிறீர்கள் என்று, அதிகாரிகள், ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். நேற்று இரவு 8:00 மணி வரை சோதனை நடந்தது. பின், சில அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, போலீசார் எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.