ஏரிகளில் லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற அதிரடி உத்தரவு
ஏரிகளில் லோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு; ஆக்கிரமிப்பு அகற்ற அதிரடி உத்தரவு
ADDED : ஆக 20, 2024 11:36 PM

பெங்களூரு : ஏரிகள், மழை நீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால், தண்ணீர் சரியாக பாய்வதில்லை. இத்தகைய ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, மாநகராட்சி பலமுறை கூறியும், சில அரசியல் நெருக்கடியால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காண்பிக்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், துணை நீதிபதிகள் பணீந்திரா, வீரப்பா ஆகியோர், நேற்று திடீரென விபூதிபுரா, தொட்டநெகுந்தி ஏரிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, விபூதிபுரா ஏரியில் ஏன் நீர் சேகரிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, மழை சரியாக பெய்யாததால், நீர் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்.
ஆனால், ஏரியை இணைக்கும் மழை நீர் கால்வாய்கள் மூடப்பட்டுள்ளது.
ஏரிகளுக்கு தண்ணீர் வந்தால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் நீர் அதிகரிக்கும். இதனால், டேங்கர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதால், அவர்களின் நெருக்கடி காரணமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, ஏரிகளை இணைக்கும் மழை நீர் கால்வாய்களை துார்வாரி சரி செய்யும்படி அதிரடியாக உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக, 20 நாட்களில் அறிக்கை சமர்பிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, போதிய பாதுகாப்பு வழங்கும்படி போலீசாருக்கும் உத்தரவிட்டனர்.
பின், தொட்டநெகுந்தி ஏரியில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அப்போது, இந்த ஏரியை சீரமைக்க 14 கோடி ரூபாயை, அரசு வழங்கி உள்ளது. இந்த நிதியை எந்தெந்த பணிகளுக்கு பயன்படுத்தினீர்கள் என்று கணக்கு தாக்கல் செய்யும்படி, தலைமை செயற் பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.

