லோக்சபா 3ம் கட்ட தேர்தல்: அமைதியாக முடிந்த ஓட்டுப்பதிவு
லோக்சபா 3ம் கட்ட தேர்தல்: அமைதியாக முடிந்த ஓட்டுப்பதிவு
ADDED : மே 08, 2024 01:40 AM

புதுடில்லி, லோக்சபாவுக்கு ஏப்., 19ல் துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.
குஜராத் உட்பட, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 93 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது.
மூன்றாம் கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, மேற்கு வங்க மாநில காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் முக்கியமானவர்கள்.
நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு மாலை 6:00 மணி வரை நடந்தது. பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், காலையிலேயே மக்கள் அதிகளவில் ஓட்டுப்போட திரண்டனர்.
குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளில், சூரத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி வென்றார். இதையடுத்து, 25 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது.
உத்தர பிரதேசத்தின் மெயின்புரியில் உள்ள ஓட்டுச்சாவடியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் ஓட்டளித்தனர்.
இங்குள்ள பதாயூன் தொகுதிக்கு உட்பட்ட தோரான்புர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சாலை வசதி அமைக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து, தேர்தலைப் புறக்கணித்தனர்.
அதுபோல பிரோசாபாதில் உள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களும், தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை என்பதை வலியுறுத்தி, ஓட்டுப் பதிவை புறக்கணித்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது. இங்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் - பா.ஜ., மற்றும் காங்கிரஸ் - மார்க்.,கம்யூ., கூட்டணி என, மும்முனை போட்டி நிலவுகிறது. பல இடங்களில், இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.
ஓட்டுச் சாவடிகள் கைப்பற்ற முயற்சி, வன்முறை, என, காலை 9:00 மணிக்குள், 182 புகார்கள் வந்ததாக, தேர்தல் கமிஷன் கூறியது.
கர்நாடகாவில் காலையில் இருந்து ஓட்டுப்பதிவு வேகமாக இருந்தது. இரண்டு இடங்களில் தேர்தல் பணியில் இருந்த இரண்டு அரசு ஊழியர்கள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
மாலை நிலவரப்படி, 62 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. அதிக பட்சமாக அசாமில், 75; குறைந்தபட்சமாக மஹா., வில் 55 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
முதல் இரண்டு கட்டங்களில், 189 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. மூன்றாம் கட்டத்தில், 93 தொகுதிகளைச் சேர்த்து, இதுவரை, 282 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துஉள்ளது.
அடுத்தக்கட்ட தேர்தல்கள், வரும், 13, 20, 25 மற்றும் ஜூன், 1ம் தேதி நடக்க உள்ளன. ஓட்டு எண்ணிக்கை, ஜூன், 4ம் தேதி நடக்கிறது.

