லோக்சபா தேர்தல் பிரசாரம்; 26,000 கி.மீ., பயணித்த முதல்வர்
லோக்சபா தேர்தல் பிரசாரம்; 26,000 கி.மீ., பயணித்த முதல்வர்
ADDED : மே 10, 2024 10:55 PM
லோக்சபா தேர்தலில், 14 வாக்குறுதி மாநாடுகள், 76 மக்கள் குரல் மாநாடுகளில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா, மொத்தம் 20 - 26,000 கி.மீ., துாரம் பயணம் செய்துள்ளார்.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இம்முறை 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு அக்கட்சி இலக்கு நிர்ணயித்து உள்ளது.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, முதல்வர் சித்தராமையா தலைமையில், மாநிலம் முழுதும் காங்கிரசின் தரப்பில் 14 வாக்குறுதி மாநாடுகள் நடத்தப்பட்டன.
காங்கிரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களின் பயன்கள் குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டன. சென்ற இடமெல்லாம் வாக்குறுதி திட்டங்கள் குறித்து பேசி வந்தார்.
தேர்தல் அறிவித்த பின், 28 லோக்சபா தொகுதிகளின், 76 இடங்களில், காங்கிரஸ் சார்பில் மக்கள் குரல் மாநாடு நடத்தப்பட்டது. இந்த அனைத்து மாநாடுகளிலும் முதல்வர் பங்கேற்றார்.
அதில், வாக்குறுதித் திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய பா.ஜ., அரசின் தோல்விகள் குறித்து, தனக்கே உரிய பாணியில் விமர்சனம் செய்து பேசினார். நிதி வழங்குவதில், கர்நாடகாவுக்கு மத்திய பா.ஜ., அரசு காலி சொம்பு மட்டுமே கொடுத்தது என்று வினோதமான போராட்டமும் நடத்தினார்.
வாக்குறுதி திட்டங்களின் 14 மாநாடுகள், மக்கள் குரலின் 76 மாநாடுகள் என மொத்தம், 90 மாநாடுகளில் முதல்வர் பங்கேற்றார். சராசரியாக 20,000 - 26,000 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்துள்ளார் என, முதல்வரின் ஊடக குழுவினரின் வாகனங்கள் பயணித்த அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
முதல்வர் பங்கேற்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும், குறைந்தபட்சம் 7,000 முதல், அதிகபட்சம் 60,000 பேர் பங்கேற்றதாக தெரிய வந்துள்ளது. 14 லட்சத்துக்கும் அதிகமானோரை தன் பேச்சு மூலம் கவர்ந்ததாக, முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -