ADDED : மே 09, 2024 05:27 AM
பெங்களூரு : கர்நாடகாவில் லோக்சபா தேர்தல், மற்றொரு பக்கம் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால், பீர் விற்பனை அமோகமாக இருந்தது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக பீர் பயன்படுத்தினர்.
தொண்டர்கள், வாக்காளர்களுக்கு வினியோகிக்க அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பீர் பெட்டிகளை வாங்கினர். ஏப்ரல் மாதம், 48.72 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையானது.
கலால் துறை வரலாற்றில் ஒரே மாதத்தில், இந்த அளவில் பீர் விற்பனையானது, இதுவே முதன் முறை. 2023 ஏப்ரலில் 38.59 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையானது. நடப்பாண்டு ஏப்ரலில், 11.13 லட்சம் பெட்டிகள் பீர், கூடுதலாக விற்பனையாகியுள்ளது. மே முதல் வாரமும், அதிகமான பீர் விற்பனையானது.
கடந்த 2018ல், 27.39 லட்சம் பெட்டி, 2019ல் 26.82 லட்சம் பெட்டிகள் பீர் விற்கப்பட்டன. 2020ல் கொரோனா ஊரடங்கு வேளையில் மது விற்பனைக்கு தடை இருந்தது. 2021ல் 25.72 லட்சம் பெட்டி, 2022ல் 36.84 லட்சம் பெட்டி, 2023ல் 38.59 லட்சம் பெட்டி, 2024ல் 48.72 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையானது.