லோக்சபா தேர்தல் 'ரிசல்ட்' பிரதமர் மோடி புது விளக்கம்
லோக்சபா தேர்தல் 'ரிசல்ட்' பிரதமர் மோடி புது விளக்கம்
ADDED : ஜூன் 16, 2024 02:32 AM

புதுடில்லி : இத்தாலியில் நடந்த ஜி -- 7 மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மோடி, 'இந்திய தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகிற்கும் கிடைத்த வெற்றி' என கூறினார். இத்தாலி பயணத்தை முடித்த அவர் நேற்று காலை நாடு திரும்பினார்.
ஜி - 7 நாடுகளின் உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் கடந்த மூன்று நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
தன் உரையில், 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது, அனைவருக்கும் மலிவு விலையில் எரிசக்தி கிடைக்கச் செய்வது, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதில் உறுதியுடன் இருப்பது, கார்பன் உமிழ்வை குறைக்க எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பேசினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் குறித்து பிரதமர் தன் உரையில் கூறியதாவது:
இந்தியாவில் நடந்த லோக்சபா தேர்தலில் 50 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. 64 கோடி மக்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தினர். தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக தேர்தல் செயல்முறை வெளிப்படைத்தன்மை உடையதாகவும், நியாயமானதாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தேர்தலின் முடிவு சில மணி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. இது ஜனநாயகத்தின் தாய் என்ற எங்களின் பண்டைய மதிப்பீடுகளுக்கான உதாரணம்.
இந்த வரலாற்று வெற்றியின் வாயிலாக இந்திய மக்கள் எனக்கு வழங்கிய ஆசியை ஜனநாயகத்தின் வெற்றியாக கருதுகிறேன். இந்த தேர்தல் முடிவு, ஒட்டு மொத்த ஜனநாயக உலகிற்கும் கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து, இத்தாலியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை டில்லி வந்தடைந்தார்.