லோக்சபா தேர்தல் பயிற்சி வகுப்புகள் இன்று போக்குவரத்தில் மாற்றம்
லோக்சபா தேர்தல் பயிற்சி வகுப்புகள் இன்று போக்குவரத்தில் மாற்றம்
ADDED : மே 16, 2024 02:02 AM
புதுடில்லி:லோக்சபா தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடப்பதால், டி.டி.யு., எனும் டில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அருகே இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து தடை, கட்டுப்பாடுகள் அமலப்படுத்தப்படுகிறது.
டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி இன்றும் நாளையும் ஷாபாத் தவுலத்பூரில் உள்ள டி.டி.யு.,வில் நடக்கிறது.
இதை முன்னிட்டு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஷஹபாத் டெய்ரி சுற்றுப்புற பகுதிகளில் இருந்து டி.டி.யு., அல்லது சமய்பூர் பட்லி மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வரும் வாகன ஓட்டிகள், செயின்ட் சேவியர் சிவப்பு விளக்கு, கே.என்., கட்ஜு மார்க் வழியாக செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சமய்பூர் பட்லி மெட்ரோ அல்லது ரோகிணி செக்டார் - 18, 19ல் இருந்து ஷஹபாத் பால் பண்ணையை நோக்கி வரும் வாகன ஓட்டிகள், ரோகினி செக்டார் - 16 வழியாக கே.என்., கட்ஜு மார்க்கை அடைய வேண்டும்.
அசவுகரியங்களைத் தவிர்ப்பதற்காக அப்பகுதியில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினரின் வழிகாட்டுதல்களை வாகன ஓட்டிகள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இப்பகுதியில் சுமூகமான போக்குவரத்து நிர்வாகத்தை உறுதி செய்யவும், இடையூறு இல்லாத பயணத்திற்காகவும், தங்கள் பயணத்தை பயணியர் முன்கூட்டியே திட்டமிடுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.