ADDED : மே 05, 2024 05:53 AM
பெங்களூரு: கிராமப்புற மாணவர்கள் படிப்பிலும், பிற செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த கோடைகால பயிற்சி முகாம், இம்முறை நடத்தப்படவில்லை.
கர்நாடகாவில் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் படிப்பிலும், மற்ற நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கோடைகால பயிற்சி முகாமுக்கு, அதிக பணம் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.
கூலி வேலை
சில தொண்டு நிறுவனங்கள் இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள், இந்த வசதிகள் கிடைக்காமல், பெற்றோர் கூலி வேலை செய்யும் இடங்களுக்கு செல்வர்.
அக்கம் பக்கத்தில் உள்ள மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடி வந்தனர். இதைத் தவிர்க்கும் வகையில், 2017 - 2018ல் 4, 5, 6ம் வகுப்பு மாணவர்களுக்காக, 'கொஞ்சம் படி, கொஞ்சம் ஜாலி' என்ற திட்டத்தை, அரசு அறிமுகம் செய்தது.
அன்று முதல் ஆண்டுதோறும் கோடை கால விடுமுறையில் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, மகளிர், குழந்தைகள் நலத்துறை சார்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் இணை பாடத்திட்டம், பாடம் சாராத செயல்களில், மாணவர்கள் தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வர்.
ஆனால், நடப்பாண்டு லோக்சபா தேர்தல் நடப்பதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோடைகால முகாம் ஏற்பாடுகள் குறித்து, அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கிராமப்புற மாணவர்கள், மொபைல் போன், 'டிவி'யே கதி என்று உள்ளனர். இதனால், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். அரசு, கோடை முகாமை எப்போது துவக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதே வேளையில், குழந்தைகளை பற்றி சிந்திக்க வேண்டிய அரசு, தேர்தல் என்ற பெயரில் கோடைகால முகாம்களுக்கு மானியம் வழங்காதது வேதனையை அளித்துள்ளதாக பலரும் தெரிவித்தனர்.
நிம்மதி
இதுகுறித்து பெண்கள், குழந்தைகள் நலத்துறை துணை இயக்குனர் உஸ்மான் கூறுகையில், ''மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் வரும் 7ம் தேதி முடியவுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு நிம்மதி கிடைக்கும்.
''அடுத்த சில நாட்களில் மாநிலம் முழுதும் கோடைகால முகாம்கள் நடத்த அரசு முடிவெடுக்க வேண்டும். ஆனால், முகாம்கள் நடத்துவதற்கான சுற்றறிக்கை இன்னும் வரவில்லை,'' என்றார்.