தலைவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் லோக்சபா தேர்தல்
தலைவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் லோக்சபா தேர்தல்
ADDED : மே 29, 2024 04:46 AM
கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26, இம்மாதம் 7ம் தேதிகளில், இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. அடுத்த மாதம் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
'ஆளுங்கட்சியான காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும்' என, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் சொல்கின்றனர். 'பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும்' என, இரு கட்சியின் தலைவர்களும் கூறி வருகின்றனர்.
இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ், பா.ஜ., தலைவர்கள் சிலரின், அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என, முதல்வருக்கு இப்போது இருந்தே படபடக்க ஆரம்பித்து விட்டது.
பதவி அம்போ
காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. தங்களுக்கு பொறுப்பான வேட்பாளர்கள் வெற்றிக்காக, குளுகுளு அறையில் இருக்கும் அமைச்சர்கள், வெயிலில் நொந்து நுாலாகி பிரசாரம் செய்தனர்.
தோல்வி அடையும் வேட்பாளருக்கு பொறுப்பான, அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அமைச்சர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். தங்கள் பொறுப்பு வேட்பாளர்கள் தோற்றால், அமைச்சர் பதவி அம்போ ஆகிவிடுமோ என்ற கவலையில் உள்ளனர்.
பா.ஜ., கடந்த லோக்சபா தேர்தலில் 28ல் 25 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி இருந்தது. எம்.எல்.ஏ.,க்கள் ஒத்துழைப்பு இல்லாமல் தோற்றனர்.
இம்முறை காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியில் உள்ளது. ஐந்து வாக்குறுதி திட்டங்கள் அரசுக்கு கைகொடுக்கலாம் என்று அக்கட்சி நம்புகிறது. இதனால் கடந்த முறை வெற்றி பெற்ற இடங்களை விட, சற்று குறைவான இடங்களிலேயே பா.ஜ., கூட்டணி வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது.
தலைவர் மீது பழி
காங்கிரஸ் கடந்த முறை ஒரு இடத்தில் தான் வென்றது. இம்முறை கூடுதலாக ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட, அவர்களுக்கு பிளஸ் பாயின்ட் தான். ஆனால் கடந்த முறை 25 இடங்களில் வென்றுவிட்டு, இம்முறை சில இடங்களில் தோற்பதை பா.ஜ., தலைவர்கள் விரும்பவில்லை. சட்டசபை தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்கு பின்பு தான், மாநிலத் தலைவரை நியமித்தனர்.
இப்போது மாநிலத் தலைவராக இருக்கும் விஜயேந்திரா மீது, பெரும்பாலான மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் கட்சியின் நலனுக்காக, எதுவும் பேசாமல் உள்ளனர். ஒருவேளை குறைந்த இடத்தில் மட்டும் பா.ஜ., வெற்றி பெற்றால், தலைவர் மீது பழியை துாக்கி போடவும் ஒரு 'டீம்' தயாராகி உள்ளது.
இதனால் தலைவருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அதிக இடத்தில் கட்சி வெற்றி பெற்றால் தான், அவரது அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
மத்திய அமைச்சர்
இதுபோல பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்து, மீண்டும் பா.ஜ., பக்கம் தாவிய, முன்னாள் முதல்வர் ஒருவரின் அரசியல் எதிர்காலத்தையும், இந்த தேர்தல் முடிவு தீர்மானிக்க உள்ளது. வெற்றி பெற்றால் அவர் ஆதிக்கம் செலுத்தலாம். தோற்று போனால் இப்போது இருக்கும், மரியாதை கூட கிடைக்காது.
பா.ஜ., கூட்டணியில் மாண்டியாவில் போட்டியிட்ட ம.ஜ.த., முன்னாள் முதல்வருக்கு, மத்திய அமைச்சர் பதவி ஆசை வந்து உள்ளது. வெற்றி பெற்றால் கண்டிப்பாக மத்திய அமைச்சர் ஆவார்.
ஆனால் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. இன்னும் பல அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நாளாக, ஜூன் 4ம் தேதி இருக்க போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.