ADDED : மார் 10, 2025 09:48 PM

பூங்கா நகர் பெங்களூரில், புராதன கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. பல்வேறு கோவில்கள் பக்தர்களை பரவசத்துடன் ஈர்க்கின்றன. இவற்றில் வி.வி.புரம் சனீஸ்வரர் கோவிலும் ஒன்று. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
பெங்களூரில் வரலாற்று புகழ் மிக்க பல இடங்கள் உள்ளன. ஒவ்வொரு இடத்துக்கும் தனி மகத்துவம் உள்ளது. பசவனகுடி என்றால் கடலைக்காய் திருவிழா, தொட்ட கணபதி கோவில், தொட்ட பசவண்ணர் கோவில் நினைவுக்கு வரும். ஹலசூரு என்றால் பழமையான சோமேஸ்வரர் கோவில், பனசங்கரி என்றால் பனசங்கரி கோவில் நினைவுக்கு வரும்.
அதேபோன்று காந்தி பஜார் அருகில் சஜ்ஜன்ராவ் சதுக்கத்தில் உள்ள வி.வி.புரம் என்றால் 'புட் ஸ்ட்ரீட்' நினைவுக்கு வரும். இங்கு கிடைக்காத உணவு ரகங்களே இல்லை. இது உணவு பிரியர்களுக்கு பிடித்தமான இடமாகும். இதே பகுதியில் சக்திவாய்ந்த சனீஸ்வரர் கோவில் உள்ளது பலருக்கும் தெரியாது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
வாழ்க்கையில் வாட்டி வதைக்கும் கஷ்டங்களில் அவதிப்படுவோர், இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து, வேண்டிக் கொண்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக, சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பயபக்தியுடன் வணங்கி, நெய்வேத்தியம் செய்து, விளக்கேற்றி வழிபடுவர்.
சனீஸ்வரர் கோவிலுக்குள் வீர பத்ரேஸ்வரர் கோவில், சாய்பாபா கோவில், கிருஷ்ணர் கோவில் உட்பட பல்வேறு சன்னிதிகள் உள்ளன. ஒரு முறை சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்தால், பல கடவுள்களை தரிசித்துவிட்டு, மன நிறைவோடு திரும்பலாம். நிதானமாக ஒவ்வொரு கோவிலாக தரிசனம் செய்தபடி சென்றால், மனது லேசாகி அமைதி அடையும்.
சனீஸ்வரர் கோவில் அருகிலேயே, அழகான பூங்கா உள்ளது. குடும்பத்துடன் வந்தால் கோவிலை தரிசனம் செய்துவிட்டு, பூங்காவில் சிறிது நேரம் பொழுது போக்கிவிட்டுச் செல்லலாம்.
- நமது நிருபர் -