ADDED : செப் 15, 2024 12:27 AM

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி வளாகம், துரதிருஷ்டவசமாக தற்போது மசூதியுடன் தொடர்புப்படுத்தப்படுவதாகவும், அது பகவான் விசுவநாதருக்கு சொந்தமான இடம் என்றும், முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசினார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த, 17ம் நுாற்றாண்டில் இங்கு இருந்த கோவிலை இடித்து, அதன் மீது ஞானவாபி வளாகத்தை, முகலாய அரசர் அவுரங்கசீப் கட்டியதாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகளும் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில் உ.பி., யின் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலையில், சமுதாய நல்லிணக்கத்தில் நாத் பந்த் சமூகத்தினரின் பங்களிப்பு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நேற்று நடந்தது.
இந்த கருத்தரங்கை முதல்வர் யோகி ஆதித்ய நாத் துவக்கி வைத்து பேசுகையில், ''ஞானவாபியை மக்கள் துரதிருஷ்டவசமாக மசூதி என்று அழைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பகவான் விசுவநாதருடையது. அங்கே ஜோதிர்லிங்கம் உள்ளது. பல சிலைகள் உள்ளன,'' என்றார்.
அவரது இந்த கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.
சமாஜ்வாதி செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹைதர் கூறுகையில், “இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
''அரசியல்சாசனத்தின்படி பதவிப் பிரமாணம் ஏற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், நீதிமன்றத்தை மதிப்பதில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது. மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தராததால் தான், உ.பி.,யில் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோற்றது,” என்றார்.