ADDED : ஆக 02, 2024 10:13 PM
ஹாவேரி : திருமணத்திற்கு மறுத்த லாரி டிரைவரை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஹாவேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஹாவேரி அருகே மோடபென்னுார் கிராமத்தை சேர்ந்த பெண் எல்லவ்வா, 40. இவருக்கு 2010ல் முதல் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் முதல் கணவரை பிரிந்தார். பின், இன்னொருவரை இரண்டாவது திருமணம் செய்தார்.
முதல் கணவருக்கு பிறந்த மகளுக்கு, எல்லவ்வாவின் இரண்டாவது கணவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்பின் எல்லவ்வா, மகளுடன் தனியாக வசித்தார். மோடபென்னுார் கிராமத்தின் லாரி டிரைவர் நாகராஜ் மன்னிகேரி, 29 என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர்.
நாகராஜ் லாரி டிரைவர் என்பதால், லாரியில் பல ஊர்களுக்கு அவருடன் சென்றார்.
எச்சரிக்கை
இந்நிலையில் எல்லவ்வாவுடன், நாகராஜ் பழகுவது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அவரை எச்சரித்தனர். கள்ளக்காதலியிடம் இருந்து விலக ஆரம்பித்தார். இது, எல்லவ்வாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கடந்த 2021 ஆகஸ்ட் 2ம் தேதி, மோடபென்னுார் கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்தி நாகராஜ் ஓய்வு எடுத்தார். அப்போது அங்கு வந்த எல்லவ்வா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். நாகராஜ் மறுத்து விட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இருவரும் ஒன்றாக மது அருந்தினர். குடிபோதையில் இருந்த நாகராஜை துண்டால் கழுத்தை இறுக்கி எல்லவ்வா கொலை செய்தார்.
அவரை ஹாவேரி ரூரல் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஹாவேரி 1வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அபராதம்
மூன்று ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி லட்சுமிநாராயணா தீர்ப்பு கூறினார். எல்லவ்வா மீதான கொலை குற்றச்சாட்டு உறுதியாகி இருப்பதாக கூறிய நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை, 35,000 ரூபாய் அபராதம் விதித்தார்.