ADDED : மார் 12, 2025 05:58 AM

பெங்களூரு; ''கர்நாடகாவில் அரசின் 125 பொதுத்துறை நிறுவனங்களில், 16 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; 34 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.
மேல்சபையில் நேற்று பா.ஜ.,வின் கே.எஸ்.நவீன், ம.ஜ.த.,வின் டி.ஏ.ஷ்ரவணா ஆகியோரின் கேள்விக்கு பதிலளித்து, சித்தராமையாவுக்கு பதிலாக, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது: கர்நாடகாவில் அரசின் 125 பொதுத்துறை நிறுவனங்களில், 16 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; 34 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை, மீண்டும் லாபத்தில் இயங்க வைக்க வேண்டியது அவசியம் என கருதப்படுகிறது.
இத்தகைய பொது நிறுவனங்களுக்கு மானியம், கடன், பங்குகள் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. செயல்படாத, நிதி ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தும் பொது நிறுவனங்களை மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ற வகையில் நிதித்துறை நடவடிக்கை எடுக்கும். செயல்படாத நிறுவனங்களை மீட்டெடுப்பது குறித்து மதிப்பீடு முடிந்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு விமான நிலைய ரயில் இணைப்பு நிறுவனம்; கர்நாடக மாநில வேளாண் சோளம் தயாரிப்பு நிறுவனம்; மைசூரு புகையிலை நிறுவனம்; மைசூரு மேட்ச் (தீப்பெட்டி) நிறுவனம்; மைசூரு லேம்ப் (விளக்கு) ஒர்க்ஸ் நிறுவனம்; மைசூரு காஸ்மெடிக்ஸ் நிறுவனம் உட்பட அரசுக்கு சொந்தமான 16 நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.
அதுபோன்று, பெஸ்காம் உட்பட ஐந்து மின் வினியோக நிறுவனங்கள்; பி.எம்.டி.சி., உட்பட நான்கு போக்குவரத்துக் கழகங்கள் உட்பட 36 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.