இழந்த பொருள் மதிப்பு ரூ.45,000: இண்டிகோ தந்த இழப்பீடு ரூ.2,450
இழந்த பொருள் மதிப்பு ரூ.45,000: இண்டிகோ தந்த இழப்பீடு ரூ.2,450
ADDED : ஆக 26, 2024 11:30 PM

புதுடில்லி: 'இண்டிகோ' விமானத்தில் பயணித்த போது, 'பேக்'கில் இருந்த 45,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போன நிலையில், அதற்கு ஈடாக வெறும் 2,450 ரூபாய் மட்டுமே அந்நிறுவனம் வழங்கியதாக, பாதிக்கப்பட்ட பயணி தெரிவித்தார்.
சமூக வலைதளம்
தனியார் விமான சேவை நிறுவனமான இண்டிகோ விமானத்தில், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் இருந்து, வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்திக்கு, கடந்த ஜூலை மாதம் ஒருவர் பயணித்தார்.
அப்போது, கோல்கட்டா விமான நிலையத்தில், அவரது பேக், 'செக் இன்' செய்யப்பட்டது. ஆனால், குவஹாத்தி வந்தடைந்த போது, அவரது பேக்கை காணவில்லை.
அந்த பேக்கில், 45,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பான், ஆதார் என, முக்கிய ஆவணங்களும் இருந்ததாக அந்த நபர் தெரிவித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணியின் நண்பர், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
இது மிகவும் அபத்தமானது. 45,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், முக்கிய ஆவணங்கள் இருந்த பேக்கை காணவில்லை. ஆனால், அதற்கு ஈடாக 2,450 ரூபாய் மட்டுமே இண்டிகோ நிறுவனம் வழங்கி உள்ளது. இதை வைத்து என்ன செய்ய முடியும்?
350 ரூபாய்
பேக் தொலைந்து விட்டால், விமான நிறுவனம் 1 கிலோவுக்கு அதிகபட்சமாக 350 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. அப்படியிருக்கையில், இண்டிகோ வழங்கிய தொகை போதுமானது அல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து, இண்டிகோ தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

