காங்கிரசிலிருந்து விலகிய லவ்லி சிங் பா.ஜ.,வில் இணைந்ததால் பரபரப்பு
காங்கிரசிலிருந்து விலகிய லவ்லி சிங் பா.ஜ.,வில் இணைந்ததால் பரபரப்பு
ADDED : மே 05, 2024 12:11 AM

புதுடில்லி: டில்லி காங்கிரஸ் தலைவராக இருந்து சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்த அரவிந்தர் சிங் லவ்லி நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும் இம்மாதம் 23ல் தேர்தல் நடக்கிறது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ.,வும் ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
டில்லியில் ஆம் ஆத்மியுடன், கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் கண்ணையா குமார், உதித் ராஜ் ஆகியோரை காங்கிரஸ் மேலிடம் வேட்பாளராக அறிவித்ததில், அரவிந்தர் சிங்கிற்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் காங்கிரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜ் குமார் சவுகான், நீரஜ் பசோயா மற்றும் நசீப் சிங் ஆகியோருடன் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், “நாங்கள் நம்பிக்கை இழந்திருந்த சமயத்தில், பா.ஜ.,வில் இணைய வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி.
''லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்,” என்றார்.
லவ்லி ஏற்கனவே பா.ஜ.,வில் இருந்தவர். கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் காங்கிரசுக்கு தாவினார். இப்போது பா.ஜ.,வுக்கு திரும்பியுள்ளார்.