ADDED : பிப் 24, 2025 05:11 AM

உத்தர கன்னடா: பத்து ஆண்டுகளாக காதலித்த பெண், வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால், கோபமடைந்த காதலன், காதலியின் கணவரை பஸ்சுக்குள் குத்தி கொலை செய்தார்.
பெங்களூரை சேர்ந்தவர் கங்காதரும், அவரது மனைவி பூஜாவும், தங்கள் உறவினர் நிகழ்ச்சியில் பங்கேற்க, இரண்டு நாட்களுக்கு முன், உத்தர கன்னடா மாவட்டம் கார்வாருக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் நிகழ்ச்சி முடிந்து பெங்களூருக்கு செல்ல, சிர்சி பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பஸ்சில் இருந்து நபருக்கும், கங்காதருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மற்றொரு நபர், தான் வைத்திருந்த கத்தியால், கங்காதரை குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
அதிர்ச்சி அடைந்த பூஜா, சக பயணியர், கங்காதரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையில், கங்காதரை கொன்ற நபர், சிர்சி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியானது. கங்காதரை கொலை செய்தவர் பிரீதம் டிசோசா, 35, என தெரிய வந்தது. இவரும், பூஜாவும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, பிரீதமுடன் பூஜா வசித்து வந்தார்.
அப்போது பிரீதமுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது பூஜாவுக்கு தெரியவந்தது. கோபமடைந்த அவர், பிரீதம் கவுடாவை பிரிந்து, ஓராண்டுக்கு முன், பெங்களூருக்கு வேலை செய்ய சென்று விட்டார்.
பெங்களூரில் வேலை செய்து வந்த பூஜா, தன்னுடன் பணியாற்றி வந்த கங்காதரை, காதலித்து எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
பூஜாவின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தம்பதி வந்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு ஊருக்கு திரும்ப, சிர்சி பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்சில் அமர்ந்திருந்தார். அப்போது, பஸ்சில் இருந்த பிரீதம் டிசோசா, கங்காதரை கத்தியால் குத்தியதாக தெரிவித்துள்ளார்.
கங்காதரும், பூஜாவும் பஸ் நிலையத்துக்கு வந்தது பிரீதமுக்கு எப்படி தெரிந்தது. பூஜாவுக்கும், பிரீதமுக்கும் இடையே இன்னமும் ஏதேனும் தொடர்பு இருந்ததா என பல கோணங்களில் சிர்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

