பஸ் ஓட்டுனருக்கு 'லோ ஷுகர்' : விபத்தில் உயிர் தப்பிய மூவர்
பஸ் ஓட்டுனருக்கு 'லோ ஷுகர்' : விபத்தில் உயிர் தப்பிய மூவர்
ADDED : ஆக 30, 2024 11:59 PM

மங்களூரு:
டிரைவருக்கு 'லோ ஷுகர்' ஏற்பட்டதால், கார் மீது பஸ் மோதி விபத்து நேர்ந்தது.
தட்சிணகன்னடா, மங்களூரின், மோர்கன்ஸ் கேட் - ஸ்டேட் பாங்க் இடையே இயங்கும் தனியார் பஸ், நேற்று மதியம் ஸ்டேட் பாங்க் பகுதிக்கு புறப்பட்டது. மிலாக்ரிஸ் ஸ்டாப்பில் நின்று பயணியரை இறக்கிவிட்டு, மீண்டும் புறப்பட்டது.
சிறிது துாரம் சென்றபோது, டிரைவர் பவுல் கிரண் லோபோ, 46, லோ ஷுகர் ஏற்பட்டு சோர்வு அடைந்தார். இதனால் நிதானமான சென்ற பஸ், முன்னே நின்றிருந்த ஆட்டோ மற்றும் கார் மீது மோதியது.
அப்போது பஸ் மற்றும் காருக்கு இடையே சிக்கிய ஆட்டோ நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர் உஸ்மான், அவரது மனைவியும், குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதன்பின் பஸ் டிரைவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆட்டோ முற்றிலும் நொறுங்கி விட்டது. மங்களூரு போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.