மதுரை - பெங்., வந்தே பாரத் ரயிலுக்கு ஆரவார வரவேற்பு
மதுரை - பெங்., வந்தே பாரத் ரயிலுக்கு ஆரவார வரவேற்பு
ADDED : செப் 01, 2024 03:29 AM

பெங்களூரு : மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலுக்கு, கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில், நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தை விட, 20 நிமிடம் முன்னதாகவே வந்ததால், பயணியர் 'குஷி' அடைந்தனர்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பெங்களூரில் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, பெங்களூரு - நாகர்கோவில்; மைசூரு - துாத்துக்குடி ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு ரயில்களும் எப்போதும் நிரம்பி வழிந்தபடி தான் செல்லும்.
வெள்ளிக்கிழமை இங்கிருந்து செல்வதற்கும், ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து வருவதற்கும் டிக்கெட் கிடைப்பது, அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.
பெங்களூரு - நாகர்கோவில் ரயில் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக செல்கிறது. மைசூரு - துாத்துக்குடி ரயில் சேலத்தில் இருந்து பிரிந்து, ஈரோடு சென்றுவிட்டு மீண்டும் கரூர் வருகிறது.
பயணியர் கோரிக்கை
மைசூரு - துாத்துக்குடி ரயிலில் திருநெல்வேலி செல்வோர், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பாசஞ்சர் ரயிலில் திருநெல்வேலி சென்றடைய வேண்டும். திருநெல்வேலி சென்றடைய, 15 மணி நேரம் வரை ஆகிறது.
முக்கிய நகரங்களை விரைவில் இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதில் இருந்து, பெங்களூரு - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என, தமிழகத்தின் தென்மாவட்ட பயணியர் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள், வாய்ப்பு இருந்தால் ரயில் கண்டிப்பாக இயக்கப்படும் என்று கூறி இருந்தனர்.
இந்நிலையில் மதுரை - பெங்களூரு இடையில் ஜூன் மாத இறுதியில் இருந்து, வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின், ரயில் இயக்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ரயில் இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியானது. ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மதுரை - பெங்களூரு ரயிலை, பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். மதுரையில் இருந்து மதியம் 12:57 மணிக்கு புறப்பட்ட ரயில் இரவு சரியாக 9:10 மணிக்கு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தின், புதிதாக கட்டப்பட்டு உள்ள நடைமேடைக்கு ரயில் வந்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் அமர்ந்திருந்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன், ரயில்வே ஊழியர்கள், பயணியர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
ரயிலை ஓட்டி வந்த பைலட் சுப்பிரமணியன், உதவி பைலட் அஜித்குமாருக்கு கவர்னர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
ரயிலில் வந்தவர்கள் உற்சாமாக 'செல்பி' எடுத்துக் கொண்டனர். இரவு 10:30 மணிக்கு ரயில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.
ரயில் பயண நேரம் 9 மணி நேரம் கூறப்பட்டிருந்தது. ஆனால், மதுரையில் 30 நிமிடம் தாமதமாக கிளம்பியது. இருந்தாலும், பெங்களூருக்கு 9:30 மணிக்கு முன்னதாகவே, 9:10 மணிக்கு வந்து சேர்ந்ததால், அனைவரும் பாராட்டினர். மொத்தத்தில் மதுரை - பெங்களூரு இடையே ரயில் 8 மணி 10 நிமிடங்களில் வந்து சேர்ந்தது.
பயணியர் அனைவரும் டிக்கெட் கட்டணம் இன்றி இலவசமாக அழைத்து வரப்பட்டனர்.
ஆன்மிக பயணம்
இன்று முதல் தினமும் அதிகாலை 5:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கே.ஆர்., புரம் வழியாக கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு மதியம் 1:00 மணிக்கு வருகிறது.
மறுமார்க்கத்தில் இங்கிருந்து பகல் 1:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத், மதுரைக்கு இரவு 9:45 மணிக்கு சென்றடைகிறது.
இரு நகரங்களையும் கடக்க 8 மணி நேரம் 15 நிமிடம் ஆகிறது. மற்ற ரயில்களை விட இரண்டு மணி நேரத்தில் இருந்து, இரண்டரை மணி நேரம் பயண நேரம் குறையும்.