சங்கடஹர கணபதி கோவிலில் மஹா சிவராத்திரி பூஜை ஏற்பாடு
சங்கடஹர கணபதி கோவிலில் மஹா சிவராத்திரி பூஜை ஏற்பாடு
ADDED : பிப் 25, 2025 08:02 PM
“தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறைவும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே:”
இத்தகைய சிறப்புமிக்க இறைவனைப் போற்றி வாழ்தல் நம் கடமை.
இன்று மஹா சிவராத்திரி, நன்னாள். பூலோ சொக்கமாகத் திகழும் வசுந்தரா என்க்ளேவின் சங்கடஹர கணபதி கோவிலில் இந்த ஆண்டும் எம்பெருமான் சிவபிரானை நாள் முழுவதும் போற்றித் துதிக்க இருக்கிறோம்.
நேற்று தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இன்று காலை 9:00 மணி அளவில் மஹா மிருத்யுஞ்ச ஹோமம் நடத்தப்படுகிறது.
மாலை 6:00 மணி அளவில் முதல்கால பூஜையும், 9:00 மணி அளவில் இரண்டாம்கால பூஜையும், 12:30 மணி அளவில் மூன்றாம்கால பூஜையும், 3:00 மணி அளவில் நான்காம்கால பூஜையும் நடைபெற உள்ளது.
முதல் கால பூஜைக்குப் பின் எம்பெருமானுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படும். மூன்றாம்கால பூஜையில் எம்பெருமானுக்கு 108 சங்குகளால் அபிஷேகம் செய்யப்படும்.
நான்காவதுகால பூஜையில் லலிதா ருத்ர திரிஷதி அர்ச்சனை நடைபெறும்.
ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகத்தின்போது ருத்ர ஜெபம் நடைபெறும். அலங்காரம் நடைபெறும்போது பக்த கோடிகள் சிவஸ்லோகங்கள் சொல்லி, எம்பெருமானை வழிபடுவார்கள்.
தையல் நாயகி சமேத வைத்தியநாதனாக வீற்றிருக்கும் எம்பெருமானை சிவராத்திரியன்று வழிபட்டு, எல்லா வளமும் பெற்றிட சங்கடஹர கணபதி கோவிலின் சார்பாக வேண்டி அழைக்கிறோம்.

