மொத்தமா டேமேஜ் பண்ணிட்டாங்க; புனே போராட்டத்தில் சரத் பவார் குமுறல்
மொத்தமா டேமேஜ் பண்ணிட்டாங்க; புனே போராட்டத்தில் சரத் பவார் குமுறல்
ADDED : ஆக 24, 2024 01:34 PM

புனே: பத்லாபூரில், இரண்டு சிறுமியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில், நாட்டில் மஹாராஷ்டிராவுக்கு இருந்த பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என மஹாராஷ்டிரவின் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்., (பவார்) கட்சி தலைவருமான சரத்பவார் தெரிவித்தார்.
மஹாராஷ்டிரா தானே அருகே பத்லபூர் மழலையர் பள்ளி ஒன்றில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதையறிந்த ஊர் மக்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை சூறையாடிய அவர்கள். பத்லபூர் ரயில் நிலையத்தில் கலவரம் செய்தனர்; ரயில் சேவையே ஸ்தம்பித்தது.
மவுனப் போராட்டம்
இந்நிலையில், இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் புனேயில் நடந்த மவுனப் போராட்டத்தில் சரத்பவார்,உத்தவ் தாக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது சரத்பவார் பேசியதாவது: பெண்களின் பாதுகாப்பிற்கும் மாநில அரசு பொறுப்பு என்பதை மஹாராஷ்டிரா அரசு மறந்துவிட்டது.
பத்லாபூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக நினைத்தால், அரசு உணர்வற்றதாக உள்ளது. முந்தைய காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் கைகளை வெட்டிய சத்ரபதி சிவாஜியின் நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
கொடுமைகள்
லோக்சபா எம்.பி.,யும், சரத்பவார் மகளுமான சுப்ரியா சுலே பேசியதாவது: மஹா.,வில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம். போலீசாரை கண்டு குற்றவாளிகள் பயப்படுவது இல்லை. நான் இந்த அரசை கண்டிக்கிறேன். பத்லாம்பூர் சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிமாநிலத்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.