வீட்டு மனை சிபாரிசு கடிதம் ம.ஜ.த.,வின் மகேஷ் மறுப்பு
வீட்டு மனை சிபாரிசு கடிதம் ம.ஜ.த.,வின் மகேஷ் மறுப்பு
ADDED : ஜூலை 29, 2024 04:55 AM

பெங்களூரு, : ''மூடாவிடம் மனை வழங்கும்படி, நான் ஒரு சிபாரிசு கடிதம் கூட கொடுக்கவில்லை. பட்டியலில் என் பெயர் எப்படி வந்தது என, தெரியவில்லை. நான் சிபாரிசு கொடுத்தது உண்மையென்றால் நிரூபியுங்கள்,'' என ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சா.ரா.மகேஷ், சவால் விடுத்தார்.
இது குறித்து பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
நகர வளர்ச்சித்துறை அமைச்சர், மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், பெங்களூரு வீட்டுமனைக்கு இரண்டு முறை நான் சிபாரிசு கடிதம் கொடுத்ததாக கூறியுள்ளார். உரத்த குரலில் என் பெயரை கூறியுள்ளார். என் பெயரில் மனு இருப்பதை, அமைச்சர் பைரதி சுரேஷ் நிரூபிக்க வேண்டும்.
எனக்கு மைசூரின் தட்டஹள்ளியில், சர்வே எண் 133/3ல், ஒன்பது சென்ட் மனையும், போகாதியில் 2.11 ஏக்கர் மனை கொடுத்ததாக, அமைச்சர் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார். இந்த இரண்டு மனைகளும், யாருடைய பெயரில் உள்ளன என்பதை, அமைச்சர் கூறட்டும்.
இம்முறை மக்கள் எனக்கு, ஓய்வு கொடுத்துள்ளனர். மனை வழங்கும்படி சிபாரிசு செய்ய, தற்போது நான் எம்.எல்.ஏ., அல்ல. மூடா உறுப்பினரும் அல்ல. யாருக்கு எத்தனை மனைகள் வழங்கப்பட்டன என்பது பற்றி விசாரணை நடக்கட்டும்.
குமாரசாமி முதல்வராக இருந்த போது, காந்தராஜு 10,000 மனைகளை அடையாளம் கண்டார். அந்த மனைகள் என்னவாகின என்பது குறித்தும், விசாரணை நடத்த வேண்டும். குரங்கு தேனை தின்று, ஆட்டின் வாயில் தடவியதை போன்று, காங்கிரசார் நடந்து கொள்கின்றனர்.
நான் சவாலில் இருந்து, பின் வாங்கும் நபர் இல்லை. எனக்கோ, என் குடும்பத்துக்கோ மூடா மனை வழங்கினர் என்றால், அதை நிரூபிக்க வேண்டும்.
யார், யாருக்கு மனை கொடுத்தனர் என்பது, எனக்கும் தெரியும். நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கேட்டால், நான் பட்டியல் தருகிறேன். அமைச்சர் வெளியிட்ட பட்டியலில், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கூறியுள்ளார்.
காங்கிரசார் யாரும் மனை பெறவில்லையா. காங்கிரசின் எங்கள் நண்பர் தன்வீர் சேட், இந்த விஷயத்தை பற்றி வாய் திறக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு, 40 ஆண்டுகளுக்கு முன் மூடாவில் மனை பெற, பணம் கட்டினார். அவருக்கு வழங்கப்பட்ட மனை, குறைவான சதுர அடி இருந்ததால், அதை திருப்பி கொடுத்து மாற்று மனை தரும்படி, விண்ணப்பம் அளித்துள்ளார். இன்னும் மாற்று மனை வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

