ஏ.டி.எம்., திருட்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளி கைது
ஏ.டி.எம்., திருட்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளி கைது
ADDED : ஆக 02, 2024 12:09 AM
வஜிராபாத்: நாடு முழுவதும் ஏராளமான ஏ.டி.எம்., திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏ.டி.எம்.,களை உடைத்து தொடர் திருட்டு நடந்து வந்தது. இந்த திருட்டுச் சம்பவங்களால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டது.
இந்த வழக்குகளில் துப்புத்துலங்காமல் பல மாநில போலீசார் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், வஜிராபாத் பகுதியில் முக்கிய குற்றவாளி ஒருவர் பதுங்கியிருப்பதாக டில்லி சிறப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியை சுற்றி வளைத்த போலீசார், லாலு என்ற வாஹித், 39, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் ஏ.டி.எம்.,களை உடைத்து திருடி வந்தது தெரிய வந்தது.
கொலை, கொலை முயற்சி, கொள்ளை, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு, ஏ.டி.எம்., உடைப்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.