ADDED : மார் 26, 2024 09:38 PM

ஹுப்பள்ளி: கர்நாடகாவின் முக்கிய மடாதிபதிகள், ஹூப்பள்ளியில் இன்று ஆலோசனை நடத்தி, அரசியல் ரீதியாக முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
இதுகுறித்து, சிரஹட்டி பக்கீரேஸ்வரா மடத்தின் மடாதிபதி பக்கீர திங்கலேஸ்வரா சுவாமிகள், ஹூப்பள்ளியில் நேற்று கூறியதாவது:
ஹூப்பள்ளியில் உள்ள மூருசாவிர மடத்தில், நாளை (இன்று) காலை 9:30 மணிக்கு மாநிலத்தின் முக்கிய மடாதிபதிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அரசியல், சமூகம், ஆன்மிகம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவோம். சமூகத்துக்கு அநீதி ஏற்படும் போதும்; அதிகாரத்தாலும், பணத்தாலும் மதம் பிடித்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் திசை மாறும்போதும் அவர்களை எச்சரிப்பது மடாதிபதிகளின் கடமை.
அத்தகைய சூழ்நிலை கர்நாடகாவில் தற்போது உருவாகி உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும்படி, பல்வேறு மடாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தார்வாட் முருகா மடத்தின் மடாதிபதி மல்லிகார்ஜுன சுவாமிகள் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது. கண்டிப்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும். கூட்டத்துக்கு பின், முக்கிய முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
