ADDED : செப் 01, 2024 11:48 PM

கர்நாடகாவில், மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகள், இன்றைக்கும் பண்டைய காலத்தின் சிறப்புகளை உணர்த்துகின்றன. மக்களின் கவனத்துக்கு வராத கோட்டைகளும் இங்குள்ளன. இவற்றில் மளகேடா கற்கோட்டையும் முக்கியமானதாகும்.
கலபுரகி, சேடத்தின், மளகேடா அன்றைய ராஷ்ட்ரகூடர்களின் தலைநகராக இருந்தது. இங்குள்ள மூன்று சுற்று கோட்டை, இன்றைக்கும் பிரபலமாக உள்ளது.
இது கலபுரகியில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் உள்ளது. காகினா ஆற்றங்கரையில் கட்டப்பட்ட ரம்யமான கோட்டை இதுவாகும்.
மளகேடா கற்கோட்டையை சுற்றிலும், ஓடைகள், ஊற்றுகள் உள்ளன. இந்த ஓடைகளே கோட்டையின், பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளன. உள்கோட்டை, வெளி கோட்டை என, இரண்டு பிரிவுகள் உள்ளன. உள் கோட்டையை சிறு, சிறு கற்கள், வெளி கோட்டையை பெரிய, பெரிய தடிமனான கற்களாலும் கட்டியுள்ளனர்.
கோட்டைக்குள் இப்போதும் ஜெயின் மந்திர், சன்னிதிகள், சில வீடுகளை காணலாம். அற்புதமான மளகேடா கோட்டை சோழர்கள், முஸ்லிம் மன்னர்களின் தாக்குதலுக்கு ஆளாகி சேதமடைந்தது.
அதை அரசு அவ்வப்போது சீர் செய்கிறது. பல நுாற்றாண்டு வரலாற்றை கண்ட கோட்டை, பல சமஸ்தானங்களின் தாக்குதலுக்கு ஆளாகியும், இப்போதும் தன் கம்பீரத்தை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கு.
சுற்றிலும் இயற்கை காட்சிகளுக்கு நடுவில் அமைந்துள்ள கோட்டையை காண, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். கல்வி சுற்றுலாவுக்கு மாணவர்கள் இங்கு வருகின்றனர்.
கலபுரகியில் இருந்து சேடத்துக்கு, இங்கிருந்து மளகேடாவுக்கு ஏராளமான அரசு, தனியார் பஸ் வசதி உள்ளது.
ரயில் வசதியும் உண்டு. சுற்றுலா பயணியர் தங்குவதற்கு சேடத்தில் ஹோட்டல், சொகுசு விடுதிகள் உள்ளன
- நமது நிருபர் -.