இந்தியாவுடன் வலுவான உறவு: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திடீர் 'ஐஸ்'
இந்தியாவுடன் வலுவான உறவு: மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திடீர் 'ஐஸ்'
ADDED : செப் 28, 2024 07:17 AM

புதுடில்லி: 'இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இரு தரப்பு உறவை கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வர திட்டுமிட்டுள்ளேன்' என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்தார்.
அண்டை நாடான மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் செய்து ஆட்சியை கைப்பற்றியவர் முகமது முய்சு. சீனாவுடன் நட்புறவு பாராட்டிய அவர், இந்திய விரோத செயல்பாடுகளை அதிகப்படுத்தினார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரை வெளியேற்றினார். அவரது செயல்பாடுகளாலும், இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்களின் வெறுப்பு பிரசாரத்தாலும், அங்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிந்தது.
அன்றாட வருவாய்க்கு இந்திய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பி இருந்த மாலத்தீவுகள், இதனால் பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவின் உதவியை மாலத்தீவு நாடியது. இதனை ஏற்றுக்கொண்ட இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் 50 மில்லியன் டாலர் நிதியுதவியை மேலும் ஒரு ஆண்டு நீட்டித்தது. இந்த நிலையில் தான் மாலத்தீவு அதிபர் முகமது இந்தியாவின் உறவை வலுப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.
அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவுடன் மாலத்தீவு மிகவும் வலுவான இருதரப்பு உறவை கொண்டுள்ளது. விரைவில் இந்தியாவுக்கு வர திட்டுமிட்டுள்ளேன். மாலத்தீவுக்கு இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லை. மாலத்தீவு மக்கள் வெளிநாட்டு ராணுவத்தினர் முகாமிட்டு இருப்பதை விரும்பவில்லை. இதனால் தான் இந்திய ராணுவத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றினோம். இதனால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை என்றார்.
கடந்த ஜூன் 9ம் தேதி பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க புதுடில்லி வந்த, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அவர், டில்லியில் அக்டோபர் 7ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.