மல்லிகார்ஜுன கார்கே பேச்சு சபை குறிப்பிலிருந்து நீக்கம்
மல்லிகார்ஜுன கார்கே பேச்சு சபை குறிப்பிலிருந்து நீக்கம்
ADDED : ஜூலை 02, 2024 02:20 AM

புதுடில்லி,ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசியதாவது:
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, '10 ஆண்டு கால ஆட்சி வெறும் டிரெய்லர் தான். முழு படத்தை இனி தான் பார்க்கப் போகிறீர்கள்' என, பிரதமர் மோடி பேசினார்.
ஆனால், அவரது முழு படம் எப்படி இருக்கும் என்பது, ஒரு மாதத்திற்குள்ளே தெரிந்து விட்டது.
தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் போட்டித் தேர்வுகளில் முறைகேடு, ரயில் விபத்து, விமான நிலையங்களில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து, ராமர் கோவிலில் நீர் கசிவு, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு காரணமாக, 30 லட்சம் மாணவர்களின் எதிர் காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்தால், மாணவர்கள் படிப்பை நிறுத்தி விடுவர். கடந்த ஏழு ஆண்டுகளில், 70 முறை கேள்வித்தாள் கசிந்துள்ளன. இது இரண்டு கோடி மாணவர்களின் எதிர் காலத்தை பாதித்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜ்யசபாவில் மேலும் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.எஸ்.எஸ்., குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், ''தேசத்துக்காக ஆர்.எஸ்.எஸ்., உழைக்கிறது. அந்த அமைப்பு மீது குற்றம் சாட்டுவது நியாயமில்லை,'' என்றார். மேலும், கார்கேவின் கருத்துகள் சபை குறிப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.