மாலுார் ஓட்டுப்பதிவு ஆவணங்கள் மாயம் கலெக்டர் ஆய்வில் அதிர்ச்சி
மாலுார் ஓட்டுப்பதிவு ஆவணங்கள் மாயம் கலெக்டர் ஆய்வில் அதிர்ச்சி
ADDED : ஆக 15, 2024 04:00 AM
கோலார், : மாலுார் சட்டசபை தொகுதி தேர்தல் முடிவு தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கிடைக்காததால், மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், கோலாரின் மாலுார் சட்டசபை தொகுதியில், பா.ஜ., சார்பில் மஞ்சுநாத் கவுடா, காங்கிரஸ் வேட்பாளராக நஞ்சே கவுடா களமிறங்கினர்.
இதில் நஞ்சே கவுடா, வெறும் 248 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மஞ்சுநாத் வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட் உத்தரவு
மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், மாலுார் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தி, ஆவணங்கள் தாக்கல் செய்யும்படி, கோலார் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதன்படி நேற்று முன்தினம், கலெக்டர் அக்ரம் பாஷா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், மாவட்ட பவன் வளாகத்தில் கருவூலத்தை திறந்தார்.
அங்கு இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், மாலுார் தொகுதி ஓட்டுகள் பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்தார். நீதிமன்றம் குறிப்பிட்ட ஆவணங்கள், இயந்திரத்தில் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம், மாலுார் தாலுகா அலுவலக கருவூலத்தில் இருக்கலாம் என, அங்கு ஆய்வு செய்த போது, '17 சி' கார்பன் பிரதிகள் கிடைத்தன. ஆனால் ஓட்டு எண்ணிக்கை நடந்த போது, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் கிடைக்கவில்லை.
பதிவான காட்சிகள்
இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி, கண்காணிப்பு கேமரா பொருத்திய ஒப்பந்ததாரரிடம் இருந்து, ஓட்டு எண்ணிக்கை நடந்த போது பதிவான காட்சிகளை பெற, கோலார் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆய்வு நடந்த போது, பா.ஜ., - எம்.பி., மல்லேஸ் பாபு, வேட்பாளர் மஞ்சுநாத் கவுடா, சுயேட்சை வேட்பாளர் விஜயகுமார் உட்பட, பலர் இருந்தனர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா கூறுகையில், ''நீதிமன்றம் கேட்ட குறிப்பிட்ட ஆவணங்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இல்லை.
''தேர்தல் முடிந்த பின், பதிவான காட்சிகள், இ.வி.எம்., சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மட்டும் உள்ளன. இவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்,'' என்றார்.