கும்பமேளா பெயரில் ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் கைது
கும்பமேளா பெயரில் ரூ.70 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : மார் 11, 2025 04:08 AM

பெங்களூரு : உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா கடந்த மாதம் நடந்து முடிந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோவிந்தராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திர ராவ், 35. இவர், 'பாஞ்சஜன்யா டூர்ஸ் அண்டு டிராவல்ஸ்' எனும் ஏஜன்சி நடத்தி வந்தார். கும்பமேளாவின் போது, பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட புனித தலங்களுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் அழைத்து செல்வதாகவும், ஒருவருக்கு தலா 49,000 ரூபாய் கட்டணம் என்றும் தன் முகநுாலில் பதிவிட்டார்.
இதை பார்த்த பலர், அவரை தொடர்பு கொண்டு பணம் செலுத்தினர். பணம் செலுத்தியவர்களுக்கு, அவரும் விமான டிக்கெட்டுகளை அனுப்பினார். ஆனால், சில நாட்களுக்கு பின், விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தார். அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
இதற்குள் கும்பமேளாவே முடிந்து விட்டதால், அவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் சமீபத்தில் 21 பேர் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து, ராகவேந்திர ராவை கைது செய்தனர்.
ராகவேந்திர ராவ், பெரும்பாலும் முதியவர்களை குறிவைத்து ஏமாற்றி உள்ளார். 100க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து, 70 லட்சம் ரூபாய் ஏமாற்றி உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.