ADDED : பிப் 15, 2025 02:47 AM

மாண்டியா: வீட்டு மாடி தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது செய்யப்பட்டார். பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வயல் மற்றும் தோட்டங்களில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதம். இதை அறிந்தும், சிலர் கஞ்சா பயிரிட்டு போலீசாரிடம் சிக்குகின்றனர். இந்த சட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவதில்லை. பணத்துக்காக பயிர்களுக்கு நடுவே கஞ்சா பயிரிடுகின்றனர்.
போதைப்பொருள் மாபியாவினர், விவசாயிகளுக்கு பணத்தாசை காண்பித்து, கஞ்சா விதைகளை கொடுத்து, தோட்டம், வயல்களில் பயிரிட வைக்கின்றனர். வளர்ந்த பின், அதிக பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர். தங்களுக்கு தெரியாமல் கஞ்சா பயிரிட்ட விவசாயிகள் போலீசாரிடம் சிக்கி, கைதாகும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன.
மாண்டியா, மத்துாரின் ஹளேஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கரியப்பா, 56. இவர் தன் வீட்டு மாடியில், பூந்தொட்டிகளில் கஞ்சா பயிரிட்டார். இதை பார்த்த கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மத்துார் ஊரக போலீஸ் நிலைய சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வெங்கடே கவுடா தலைமையிலான போலீசார், நேற்று மதியம் கரியப்பா வீட்டில் சோதனை நடத்தினர்.
மாடி தோட்டத்தில் பூந்தொட்டிகளில் கஞ்சா பயிரிட்டிருப்பதை கண்டுபிடித்தனர். 3.664 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். கரியப்பாவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.