ADDED : ஆக 01, 2024 12:56 AM
பாலக்காடு : கேரள மாநிலத்தில், வெள்ளம் ஆர்ப்பரித்து பாயும் பாரதப்புழை ஆற்றில் நீச்சல் அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் சுனங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி, 48. கூலி வேலை செய்யும் இவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். இவர் மீட்பு பணிகளுக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு உதவுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவர், நண்பர்களுடன் பாரதப்புழை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை காண, மாயன்னூர் பாலம் நடுபகுதிக்கு சென்றுள்ளார். நண்பர்களுக்கு கூட தெரியாமல், திடீரென பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஏறிய ரவி ஆற்றில் குதித்தார். ஆர்ப்பரித்து சென்ற வெள்ளத்தில் நீச்சல் அடித்து சிறிது தூரம் சென்று, கரை ஏறினார்.
தகவல் அறிந்து வந்த ஒற்றைப்பாலம் போலீசார், ஆபத்தான செயலை செய்த குற்றத்திற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், ஆற்றில் வெள்ளம் செல்லும் காட்சியை காண மாயன்னூர் பாலத்தில் வாகனத்தை நிறுத்துவோரை, போலீசார் எச்சரித்து, அங்கிருந்து வெளியேற்றினர்.