ADDED : ஆக 25, 2024 12:41 AM
குவஹாத்திவட கிழக்கு மாநிலமான அசாமின் நாகோன் மாவட்டத்தின் திங்க் என்ற பகுதியில், சமீபத்தில், டியூசன் முடித்து சைக்கிளில் வீட்டுக்குச் சென்ற 14 வயது சிறுமியை, மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்து ஏரிக்கரை அருகே வீசினர்.
அந்த வழியே வந்த மக்கள், பாதிக்கப்படட் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, போர்பெட்டி கிராமத்தைச் சேர்ந்த நபரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி, குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். இது குறித்து, நாகோன் எஸ்.பி., ஸ்வப்னீல் தேகா கூறியதாவது:
கைது செய்யப்பட்ட நபரை, குற்றம் நடந்த இடத்துக்கு, நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் அழைத்துச் சென்றோம். அப்போது போலீஸ்காரரை தாக்கிய அவர், அங்கிருந்து தப்பிச் சென்று, அருகே உள்ள குளத்தில் குதித்தார்.
இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின், அவரை சடலமாக மீட்டோம். தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பலாத்கார வழக்கில் கைதாகி தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை, போர்பெட்டி கிராமத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என, அக்கிராம மக்கள் அறிவித்தனர். மேலும், அந்த நபரின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

