சீக்கியர்களின் புனித நுாலை கிழித்த நபர் அடித்து கொலை
சீக்கியர்களின் புனித நுாலை கிழித்த நபர் அடித்து கொலை
ADDED : மே 06, 2024 01:27 AM
சண்டிகர்: பஞ்சாபில் உள்ள குருத்வாராவில், தங்கள் புனித நுாலின் சில பக்கங்களை கிழித்ததாக, மனநலம் பாதித்த இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தின் பண்டாலா கிராமத்தில் குருத்வாரா உள்ளது.
இங்கு, சீக்கியர்களின் புனித நுாலான குரு கிரந்த சாஹிப் வைத்து, அங்குள்ள சீக்கியர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் 19 வயது இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்து அந்த நுாலின் சில பக்கங்களை கிழித்து விட்டு, தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை பிடித்து தாக்கினர். இதில், அவர் படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்த நபரின் பெயர் பக்ஷிஷ் சிங் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்தது. இதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் போலீசார் கண்டறிந்தனர்.