ADDED : பிப் 28, 2025 05:57 AM

எலஹங்கா: ஹெல்மெட் அணியாமல் சென்றதால் ஜிம் பயிற்சியாளர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளார்.
பெங்களூரு யஷ்வந்த்பூரை சேர்ந்தவர் அருண்,30. இவர் எலஹங்கா பகுதியில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்தார். இவர் 'புல்லட்' பைக் வைத்திருந்தார். அந்த பைக்கில் வேகமாக செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு, ஜிம்மில் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டிலிருந்து மீண்டும், பைக்கில் ஹெல்மெட் அணியாமல் நண்பரை பார்க்க சென்று உள்ளார்.
ஜெ.பி., பார்க், மத்திகெரே வழியாக பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், மின்கம்பத்தில் மோதியது. அவரது தலையில் பலத்த அடிபட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார்.
இதை பார்த்த ஒருவர், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால், அருண் இறந்துவிட்டதாகவும்; ஹெல்மெட் அணிந்து இருந்தால் இறந்திருக்க மாட்டார் எனவும் டாக்டர்கள் கூறினர்.

