கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை
கண், கைகள் கட்டப்பட்ட நிலையில் மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை
ADDED : ஜூலை 22, 2024 03:54 AM
இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள தாகேல் கிராம சாலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இறந்தவரின் உடலை ஆய்வு செய்ததில், அவரது கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு, தலையில் குண்டு பாய்ந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்த நபரின் பெயர் பிரிதிபி என்பது தெரியவந்தது.
காங்லீபெக் கம்யூனிஸ்ட் மக்கள் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த இவர், போலீசாருக்கு உளவு தகவல்களை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, காங்லீபெக் கம்யூனிஸ்ட் மக்கள் கட்சி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'எங்கள் அமைப்புக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதுடன், அவப்பெயர் ஏற்படுத்தியதாலும் பிரிதிபி என்பவருக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை அளித்துள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளது.