கொலை வழக்கில் தேடப்பட்டவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டார்
கொலை வழக்கில் தேடப்பட்டவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டார்
ADDED : ஏப் 23, 2024 11:56 PM
நொய்டா:புதுடில்லி அருகே, கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர், கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார்.
கிரேட்டர் நொய்டா நியூ ஹைபத்பூரில் மார்ச் 31ம் தேதி நள்ளிரவில் மதுக்கடை உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், உ.பி., மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த நஜிம்,23, என்ற வாலிபரை தேடி வந்தனர்.
பிஸ்ராக் ஏக் மூர்த்தி சவுக் அருகே நேற்று முன் தினம் நள்ளிரவு சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்தவரை நிறுத்தினர். ஆனால், அவர் நிற்காமல் சென்றார். போலீசார் விரட்டிச் சென்றனர். மறைவான இடத்தில் பைக்கை நிறுத்தி விட்டு, போலீசை நோக்கி அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
அந்த நபரை காலில் சுட்டுப் பிடித்தனர். அவர், மதுக்கடை உரிமையாளர் கொலை வழக்கில் தேடப்பட்ட நஜீம் என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரசு மருத்துவமனையில் நஜீம் சேர்க்கப்பட்டார். அங்கு, அறுவைச் சிகிச்சை வாயிலாக அவரது காலில் இருந்து துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

