இளம்பெண்ணிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வாலிபருக்கு வலை
இளம்பெண்ணிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வாலிபருக்கு வலை
ADDED : பிப் 26, 2025 11:15 PM

மைக்கோ லே - அவுட்: திருமண இணையதளம் மூலம் அறிமுகமான பெண்ணிடம், திருமணம் செய்வதாக கூறி 60 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த, வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரின் மடிவாளாவை சேர்ந்தவர் சிவலிங்கேஷ், 31. இவருக்கு, 2022ம் ஆண்டு திருமண இணையதளம் மூலம் மைக்கோ லே - அவுட்டின் 26 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
பின், இருவரும் மொபைல் போனில் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் நேரில் சந்தித்து பேசினர். சிவலிங்கேஷை, இளம்பெண்ணுக்கு பிடித்து போனது. அவரை திருமணம் செய்ய நினைத்தார்.
இந்நிலையில், தன் தாய்க்கு மூளையில் பிரச்னை இருப்பதாகவும், சிகிச்சை செய்ய அதிக பணம் தேவைப்படுவதாகவும் இளம்பெண்ணிடம், சிவலிங்கேஷ் கூறினார். இதை நம்பிய இளம்பெண்ணும், சிவலிங்கேஷ் கேட்கும் போது எல்லாம் பணம் கொடுத்துள்ளார்.
இப்படியே 60 லட்சம் ரூபாய் வரை அனுப்பி உள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக இளம்பெண்ணிடம் பேசுவதை சிவலிங்கேஷ் தவிர்க்க ஆரம்பித்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஒரு செயலி மூலம் சிவலிங்கேஷை பற்றி தகவல் தேடினார். அவரது வீட்டின் முகவரி சமீபத்தில் கிடைத்தது. அங்கு சென்ற இளம்பெண், சிவலிங்கேஷை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
தன்னிடம் 60 லட்சம் வாங்கியது பற்றி சிவலிங்கேஷ் குடும்பத்தினரிடம் இளம்பெண் கூறினார். அப்போது தான் பலரிடம், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சிவலிங்கேஷ் பணம் வாங்கி மோசடி செய்தது தெரிந்தது.
ஏமாற்றி வாங்கும் பணத்தை கேசினோ சூதாட்டம் விளையாட அவர் பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண், சிவலிங்கேஷ் மீது நேற்று முன்தினம் மைக்கோ லே - அவுட் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சிவலிங்கேஷை தேடி வருகின்றனர்.