மாண்டியா வேட்பாளர் குமாரசாமி முன்னாள் அமைச்சர் புட்டராஜு தகவல்
மாண்டியா வேட்பாளர் குமாரசாமி முன்னாள் அமைச்சர் புட்டராஜு தகவல்
ADDED : மார் 22, 2024 05:53 AM

மாண்டியா: ''முன்னாள் முதல்வர் குமாரசாமியே, மாண்டியா லோக்சபா தொகுதி வேட்பாளர். நான் தேர்தலுக்கு தலைமை ஏற்பேன்,'' என ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் புட்டராஜு தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
மாண்டியா லோக்சபா தொகுதியில், குமாசாமியே ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிடுவார். வேட்புமனு தாக்கல் செய்ய மட்டும், அவர் வந்தால் போதும். அவரை நாங்களே பிரசாரம் செய்து, அவரை வெற்றி பெற வைப்போம். அவர் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
தமிழகம், சென்னையில் இன்று (நேற்று) குமாரசாமிக்கு வெற்றிகரமாக, இதய அறுவை சிகிச்சை முடிந்தது. மூன்று, நான்கு நாட்களில் அவர், நம் மாநிலத்துக்கு திரும்புவார்.
அதன்பின் மாண்டியா தொகுதியில், வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்வார். ம.ஜ.த.,வுக்கு எத்தனை தொகுதிகள் என, பா.ஜ., மேலிடம் நாளை (இன்று) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதன்பின் சுமலதாவுடன் பேசுவோம்.
அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம்.
நான் தேவகவுடா வீட்டை சேர்ந்த மகன். என் உயிர் மூச்சு உள்ளவரை, அவரது வீட்டு மகனாகவே இருப்பேன். காங்கிரசுக்கு செல்ல மாட்டேன்.
சொந்த முடிவுகளை எடுக்க, ம.ஜ.த.,வால் முடிவதில்லை என, அமைச்சர் செலுவராயசாமி விமர்சித்துள்ளார். அவர் எங்களின் ஹெட் மாஸ்டர். அவர் கூறியபடி நடந்து கொள்வோம். அவர் இல்லாமல் நாங்கள் பரிதவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

