ADDED : செப் 03, 2024 10:48 PM

மாண்டியா : சட்டவிரோதமாக மொபைல் போனில் கைதிகள் பேசுவதைத் தடுக்க, சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில், மாண்டியா மத்திய சிறையில் தொலைபேசி மற்றும் வீடியோ நேர்காணல் வசதியும் செயயப்பட்டு உள்ளது.
நேர்காணல் வசதி
சிறைகளில் எவ்வளவு தான் கட்டுப்பாடு, கண்காணிப்பு இருந்தாலும், உள்ளே இருந்தபடியே, மொபைல் போனில் வெளியே உள்ள, தங்கள் கூட்டாளிகளிடம் பேசி, சட்டவிரோத நடவடிக்கைகளில் கைதிகள் ஈடுபடுவது தொடர்கிறது.
இதைத் தவிர்க்கும் வகையில், மாண்டியா மாவட்ட சிறையில் கைதிகள் பேசுவதற்கு இலவச தொலைபேசி, வீடியோ நேர்காணல் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட சிறை கண்காணிப்பாளர் லோகேஷ் கூறியதாவது:
கர்நாடகாவின் மத்திய சிறைகள், மாவட்ட சிறைகளில் மொத்தம் 83 தொலைபேசி கருவிகள் நிறுவப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு கைதியும் வழக்கறிஞர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என மூன்று குறிப்பிட்ட எண்களில் பேச அனுமதிக்கப்படுவர்.
தொலைபேசி இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கைதி யாருடன் என்ன பேசுகிறார் என்ற முழு கலந்துரையாடலும் பதிவாகும்.
கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, ஆடியோ, வீடியோ காட்சிகளை, 'கழுகு கண்' வைத்து கண்காணித்து வருகிறோம். இதனால் இந்த வசதியை, கைதிகள் தவறாக பயன்படுத்த முடியாது.
7 நிமிடம் மட்டும்
இந்த சிறையில், தினமும் 140 கைதிகள், தங்கள் குடும்பத்தினர், வழக்கறிஞர், உறவினர்களிடம் பேசுகின்றனர்.
இந்த வசதியை காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கு ஏழு நிமிடங்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு கைதியும், ஒரு மாதத்துக்கு 100 நிமிடங்கள் பேசலாம்.
கடிதம் அனுப்ப விரும்புவோருக்கு, இலவசமாக அஞ்சல் அட்டை வழங்குகிறோம். இத்தகைய வசதிகளால், கைதிகளின் மன உளைச்சல் நீங்கும்.
முன்னர், சிறைக்குள் மொபைல் போன் பயன்படுத்தினால் ஆறு மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2022ல் சிறைச்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின், கைதிகள், அவர்களுக்கு உதவும் அதிகாரிகள், ஊழியர்கள் மொபைல் போன் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இதுவரை மாண்டியா மேற்கு போலீஸ் நிலையத்தில், ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கிடுக்கிப்பிடி
நண்பர்கள் என்ற போர்வையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூட்டாளியை, நேருக்கு நேர் பார்க்க, குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் வருகின்றனர்.
தற்போது வீடியோ நேர்காணல் முறை கொண்டு வரப்பட்டு உள்ளதால், அதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டு உள்ளது.
கைதிகளின் குடும்ப உறவினர்கள் அல்லது நண்பர்கள், தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களை, ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம், என்.பி.ஐ.பி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அவர்களின் கோரிக்கையை சிறை ஊழியர்கள் அனுமதித்து, தேதி, நேரத்தை நிர்ணயம் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொலைபேசியில் பேசிய கைதி. இடம்: சிறைச்சாலை, மாண்டியா.