ADDED : ஏப் 27, 2024 11:01 PM
மாண்டியா: கர்நாடகாவில் முதல்கட்டமாக தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், மாண்டியாவில் தான் அதிக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஜனநாயக கடமை ஆற்றி, மாண்டியா மக்கள் 'கெத்து' காட்டி உள்ளனர்.
கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் முதல்கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. மாநிலத்தின் தலைநகராக உள்ள பெங்களூரின் மூன்று தொகுதிகளிலும், அதிக ஓட்டுப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்ப்பு, அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. பெங்களூரின் மூன்று தொகுதிகளையும் மிஞ்சி, மாண்டியாவில் ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு 81.67 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், மாண்டியாவில் தான் அதிகம் ஓட்டுப்பதிவானது. இத்தனைக்கும் மாண்டியாவில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில் வசிக்கும் மக்கள், கிராமப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்கள்.
ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில், காலை முதல் மாலை வரை, நீண்ட வரிசையில் காத்து நின்று, ஜனநாயக கடமை ஆற்றிச் சென்று உள்ளனர்.
மாண்டியா லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சட்டசபை தொகுதிகளின் பதிவான ஓட்டுகளை பார்த்தால், மாண்டியா தொகுதியில் 77 சதவீதம், கிருஷ்ணராஜாநகரில் 80.50 சதவீதம்; கிருஷ்ணராஜபேட்டில் 80.63 சதவீதம்; மத்துாரில் 82.98 சதவீதம்; மலவள்ளியில் 77.23 சதவீதம்; மேலுகோட்டில் 87.20 சதவீதம்; நாகமங்களாவில் 84.73 சதவீதம்; ஸ்ரீரங்கப்பட்டணாவில் 84.48 சதவீதம் என பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக ஓட்டுப் பதிவாகி உள்ள மேலுகோட்டில், சுயேச்சையான தர்ஷன் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கிருஷ்ணராஜபேட் எம்.எல்.ஏ., ம.ஜ.த.,காரர். மற்ற ஆறு தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசார். இதில் நாகமங்களா எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராயசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

