ADDED : ஏப் 27, 2024 11:09 PM
நாட்டின் வட மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு தனி செல்வாக்கு உள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர, மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. ஆனால் இப்போது பிற தென் மாநிலங்களிலும் கொஞ்சம், கொஞ்சமாக பா.ஜ.,வுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த ஒரே மாநிலம் கர்நாடகா தான். கர்நாடகாவிலும் வட, கடலோர, மத்திய மாவட்டங்களில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு உள்ளது; பழைய மைசூரில் அவ்வளவாக பலம் இல்லை.
இந்த மண்டலத்தில் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில், ஒக்கலிக சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
காங்கிரசில் துணை முதல்வர் சிவகுமார், ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஒக்கலிக சமூகத்தின் பலமான தலைவர்களாக உள்ளனர். பா.ஜ.,வில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா ஆகியோர் ஒக்கலிகராக இருந்தாலும், சிவகுமார், குமாரசாமியை போன்று பலமான தலைவர்களாக இல்லை.
இதனால் சிவகுமாருக்காக காங்கிரசையும், குமாரசாமிக்காக ம.ஜ.த.,வையும் ஒக்கலிகர்கள் ஆதரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பழைய மைசூரில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற, பா.ஜ., முயற்சி செய்தது. மாண்டியாவில் பெரிய பால் பண்ணையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். ஆனாலும் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.
சிவகுமார் முதல்வர் ஆவார் என்ற பிம்பம் எழுந்ததால், ஒக்கலிகர்கள் காங்கிரசை முழுமையாக ஆதரித்தனர்.
மத்திய அமைச்சர்கள்
ஒக்கலிக சமூக தலைவராக சிவகுமார் உருவெடுக்க ஆரம்பித்தார். அவரது வளர்ச்சியை தடுக்கும் வகையில், லோக் சபா தேர்தலில் பா.ஜ.,வுடன், ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் ம.ஜ.த., சார்பில் மாண்டியாவில் குமாரசாமி, கோலாரில் மல்லேஸ் பாபு, ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் களம் இறங்கினர். தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத், பா.ஜ., வேட்பாளராக பெங்களூரு ரூரலில் களம் இறக்கப்பட்டார்.
மாண்டியாவில் குமாரசாமிக்கு எதிராக, காங்கிரசின் வெங்கடரமணேகவுடாவும், பெங்களூரு ரூரலில் மஞ்சுநாத்துக்கு எதிராக துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷும் போட்டியிட்டனர்.
குமாரசாமியும், மஞ்சுநாத்தும் வெற்றி பெற்றால், மத்திய அமைச்சர்கள் ஆவர் என, தொண்டர்கள் வீடு, வீடாக பிரசாரம் செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தோற்றுப்போவர் என, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப்பதிவில், மாண்டியா ஓட்டுப்பதிவில் சாதனை படைத்து உள்ளது. அங்கு 81.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன. 2019 தேர்தலில் 80.59 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
கடந்த தேர்தலை விட 1.08 சதவீத ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி இருக்கின்றன. 2009 தேர்தலில் மாண்டியாவில் 68.83 சதவீதம்; 2013 இடைத்தேர்தலில் 58.24 சதவீதம்; 2014 தேர்தலில் 71.47 சதவீதம்; 2018 இடைத்தேர்தலில் 52.97 சதவீதம்; 2019 தேர்தலில் 80.59 சதவீதம் பதிவாகி இருந்தது.
கனவு கனவாக...
பெங்களூரு ரூரலில் நேற்று முன்தினம் நடந்த, ஓட்டுப்பதிவில் 68.30 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019 தேர்தலில் 64.98 சதவீதம் ஓட்டுப் பதிவாகி இருந்தது. கடந்த தேர்லை விட இம்முறை 3.32 சதவீத ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி இருக்கின்றன. கடந்த 2009ல் 57.92 சதவீதம், 2013 இடைத்தேர்தலில் 52.04 சதவீதம், 2014ல் 66.45 சதவீதம், 2019ல் 64.98 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் கவனம் ஈர்த்து உள்ள, இந்த இரு தொகுதிகளிலும் கடந்த தேர்தலை விட, இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்து இருப்பதால், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனரா என்று, கேள்வி எழுந்து உள்ளது.
பெங்களூரு ரூரலில் ஓட்டுப்பதிவு அதிகரித்து இருப்பது, துணை முதல்வர் சிவகுமாரை சற்று கவலையில் ஆழ்த்தி உள்ளது. ஒரு வேளை தம்பி தோற்றால், முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் சிவகுமார் கனவு, கைகூடாமல் போக வாய்ப்பு உள்ளது. இதனால், அவர் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.

