மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்
மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பதற்றம்
ADDED : மே 05, 2024 05:47 AM

மங்களூரு: மங்களூரு விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பயணியர் பீதியில் உறைந்தனர்.
பெங்களூரின் பிரபலமான 'ராமேஸ்வரம் கபே'வில் சமீபத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. அதன் பின் பெரும்பாலான பள்ளிகளுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டில்லியில் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது மங்களூரு விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
பயங்கரவாதிகள் பெயரில், மின்னஞ்சல் மூலமாக ஏப்ரல் 29ல் இந்த மிரட்டல் வந்தது. 'மங்களூரு விமான நிலைய வளாகத்தில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மூன்று விமானங்களிலும் வெடிகுண்டு வைத்துள்ளோம். சில மணி நேரங்களில் வெடிக்கும்' என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விமான நிலையம் மற்றும் விமானங்களில் சோதனை நடத்தினர். எங்கும் வெடிகுண்டு இருக்கவில்லை; வதந்தி என்பது தெரிந்தது.
முன்னெச்சரிக்கையாக விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், இங்கிருந்து புறப்படும் விமானங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.