சட்டவிரோத மாட்டிறைச்சி கூடம் மங்களூரு மேயர் மனோஜ் ஆய்வு
சட்டவிரோத மாட்டிறைச்சி கூடம் மங்களூரு மேயர் மனோஜ் ஆய்வு
ADDED : பிப் 10, 2025 05:33 AM
மங்களூரு: சட்ட விரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்த இடத்தில் மங்களூரு மேயர் மனோஜ் குமார் திடீரென ஆய்வு செய்தார்.
கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது.
இருப்பினும், மங்களூரில் பல இடங்களில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.
இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மங்களூரு மாநகராட்சி மேயர் மனோஜ் குமார், மாவட்டத்தின் பல இடங்களில், கடந்த சில தினங்களாக சோதனை மேற்கொண்டார்.
அப்போது, குத்ரோலி எனும் பகுதியில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. மேயர், தன் குழுவினருடன் சென்று சோதனை செய்தார்.
பசுக்கள் வெட்டப்படும் இடம் மற்றும் தராசு, கொக்கிகள், மாட்டிறைச்சி, மாட்டின் எலும்புகள் காணப்பட்டன. இதனால், மேயர் கோபம் அடைந்தார்.
அப்போது, 'நகரின் மையப்பகுதியில் மாட்டிறைச்சி விற்கப்படுகிறது. ஆனால், சுகாதார துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் தொடர்புடையோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து, மங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பரத் ஷெட்டி கூறுகையில், ''பசுக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் காலில் சுட வேண்டும் என அமைச்சர் மங்கள் வைத்யா கூறியதை வரவேற்கிறேன். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். துரிதமாக செயல்பட்ட மங்களூரு மேயரை பாராட்டுகிறேன்,'' என்றார்.

