ADDED : மே 13, 2024 09:43 PM

பெங்களூரு: பெங்களூரில் மாம்பழம், பலாப்பழம் மேளா நடத்த, மாம்பழ வளர்ச்சி மற்றும் மார்க்கெட் ஆணையம் தயாராகி வருகிறது.
இதுகுறித்து, மாம்பழ வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் பெங்களூரில் மாம்பழம், பலாப்பழம் மேளா ஏற்பாடு செய்வது வழக்கம். விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவும், மக்களுக்கு ரசாயனம் கலக்காத தரமான பழங்கள் கிடைக்க வேண்டும் என்பதே, மேளாவின் நோக்கம்.
நடப்பாண்டு ஜூன் முதல் வாரம், லால்பாக் பூங்காவில் மாம்பழம், பலாப்பழம் மேளா நடத்த ஏற்பாடு செய்கிறோம். கோலார், சீனிவாசபுரா, சிந்தாமணி, பெங்களூரு ரூரல், ஹாவேரி, தார்வாட் உட்பட, பல்வேறு மாவட்டங்களின் விவசாயிகள், மேளாவில் பங்கேற்பர்.
மேளாவில் பாதாமி, ரசபுரி, செந்துாரா, மல்கோவா, நீலம், மல்லிகா, ஆம்ரபள்ளி, பங்கனபள்ளி, தோத்தாபுரி, சர்க்கரைகுட்டி உட்பட, ஊறுகாய்க்கு பயன்படுத்தும் ஆம்லெட், மிடி மாம்பழங்களும் இருக்கும்.
அதேபோன்று ஐ.ஐ.ஹெச்.ஆர்., ஜி.கே.வி.கே., என, மற்ற நிறுவனங்கள் மேம்படுத்திய பலாப்பழ ரகங்கள், விவசாயிகள் விளைவித்த பலாப்பழங்களும் இருக்கும்.
ரசாயனம் கலக்காத இயற்கையாக பழுத்த பழங்கள் மட்டுமே விற்கப்படும். மாம்பழம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களும் கூட, மேளாவில் இடம் பெறும்.
இம்முறை மாநிலத்தில் 15 லட்சம் டன் மாம்பழங்கள் அறுவடையாக வேண்டியது. ஆனால், மழை இல்லாததாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்ததாலும், இம்முறை வெறும் நான்கு முதல் ஐந்து லட்சம் டன் மாம்பழம் அறுவடையாகும்.
மற்ற மாநிலங்களிலும், மழை இல்லாமல் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே விலை அதிகம் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

