6 மாதத்தில் அமைதி திரும்பும்: மணிப்பூர் முதல்வர் உறுதி
6 மாதத்தில் அமைதி திரும்பும்: மணிப்பூர் முதல்வர் உறுதி
ADDED : ஆக 31, 2024 12:11 AM

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு, ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் வெடிக்கின்றன.
இந்நிலையில் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு மாநில முதல்வர் பைரேன் சிங் நேற்று அளித்த பேட்டி:
கூகி மற்றும் மெய்டி சமூகத்தினர் இடையே ஏற்பட்ட இனக்கலவரத்திற்கு தீர்வுக்கான துாதுக்குழு அமைத்து பேச்சு நடத்த நடவடிக்கை மேற்கொண்டேன். நாகா சமூகத்தைச் சேர்ந்த டிங்காலுங்க் காங்மெய் என்ற எம்.எல்.ஏ., மற்றும் மலைவாழ் கமிட்டி தலைவர் அடங்கிய துாதுக்குழு வாயிலாக இரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் பேச்சு நடத்தி, மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசின் உதவியுடன் மேற்கொண்டோம்.
இதற்கு எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை. ஆறு மாதங்களுக்குள் மாநிலம் முழுதும் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. மணிப்பூர் மாநிலத்திற்கு, பிரதமர் மோடி நேரில் வரவில்லை என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், அவர் வரவேண்டிய அவசியம் இதுவரை எழவில்லை. ஆனால், அதற்கு பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் பொறுப்பில் இருந்து என்னை ராஜினாமா செய்யுமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்துகின்றனர். நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? என் மீது ஏதேனும் முறைகேடு புகார்கள் உள்ளதா? நான் நாட்டிற்கு அல்லது மாநிலத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டேனா? சட்டவிரோதமாக நம் நாட்டின் எல்லைக்குள் நுழைபவர்களிடம் இருந்து மணிப்பூர் மாநிலத்தை காப்பாற்றினேன்.
மணிப்பூரையும், மாநில மக்களையும் காப்பது என் கடமை. எனவே, நான் ராஜினாமா செய்ய வேண்டிய கேள்வியே எழவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.