மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; 2 பேர் பலி;9 பேர் காயம்
மீண்டும் மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; 2 பேர் பலி;9 பேர் காயம்
UPDATED : செப் 01, 2024 10:15 PM
ADDED : செப் 01, 2024 07:35 PM

இம்பால்: கடந்த சில நாட்களாக எந்த பிரச்னையும் இல்லாமல் ஓய்ந்திருந்த மணிப்பூரில் மீண்டும் படுகொலை சம்பவம் துவங்கி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியது. தொடர்ந்து நடந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சில தினங்களாக எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி அமைதியாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று (ஆக.,31) மாநில பா.ஜ,. செய்தி தொடர்பாளர் வீ்டு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று செப்.,01-ம் தேதி தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். மலைப்பகுதியில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்து இருப்பதாவது: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 வயது மதிக்கத்ததக்க பெண் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். மேலும் அவரது எட்டு வயது மகள், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்துள்ளனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சம்பவம் நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.