மணீஷ் சிசோடியா ஜாமின் மனு சி.பி.ஐ.,க்கு கூடுதல் அவகாசம்
மணீஷ் சிசோடியா ஜாமின் மனு சி.பி.ஐ.,க்கு கூடுதல் அவகாசம்
ADDED : மே 09, 2024 02:27 AM
புதுடில்லி:டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவுக்கு பதில் அளிக்க, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.,க்கு கூடுதல் அவகாசம் அளித்து டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டில்லி துணைநிலை கவர்னர் உத்தரவிட்டார்.
விசாரணை நடத்திய சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்.,26ல் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது.
அதேநேரத்தில், இந்த முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையும், கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி மணீஷ் சிசோடியாவை கைது செய்து அதற்கான உத்தரவை சிறையில் இருந்த அவரிடம் வழங்கியது.
இந்த வழக்கை விசாரிக்கும் ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சிசோடியா தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 3ம் தேதி விசாரித்த நீதிபதி நீதிபதி ஸ்வர்ணா காந்த ஷர்மா, சிசோடியாவின் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.
இந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிசோடியா மனு மீது பதிலளிக்க மேலும் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
அந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிசோடியாவின் வழக்கறிஞர், 'ஆறு மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., உறுதி அளித்திருந்தது. ஆனால், ஓராண்டுக்கும் மேல் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்'என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்ய மேலும் நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு வரும் 14ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்'என உத்தரவிட்டார்.