நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது; நீரஜ் சோப்ரா எனக்கு நண்பர் மட்டும்தான்; மவுனம் கலைத்தார் மனு பாகர்
நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது; நீரஜ் சோப்ரா எனக்கு நண்பர் மட்டும்தான்; மவுனம் கலைத்தார் மனு பாகர்
ADDED : ஆக 15, 2024 07:03 AM

புதுடில்லி: 'நீரஜ் சோப்ரா எனக்கு நண்பர். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது' என திருமணம் செய்து கொள்ள போவதாக பரவிய வதந்திக்கு இந்திய வீராங்கனை மனு பாகர் முற்றுப்புள்ளி வைத்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வென்று அசத்தியவர் மனு பாகர். ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. இவர்கள் இருவரும் பேசி கொள்ளும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் வெளியானது. மனு பாகரின் தாயுடன் நீரஜ் சோப்ரா ஜாலியாக பேசும் வீடியோ வெளியானதால் உண்மை என்று ரசிகர்கள் நம்பினர்.
எனக்கு நண்பர் தான்!
இந்நிலையில், மனு பாகர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. இந்த பேச்சு எப்படி வந்தது என்றும் எனக்கு தெரியவில்லை. நீரஜ் சோப்ரா எனக்கு நல்ல நண்பர். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது.
2018ம் ஆண்டில் இருந்து நாங்கள் இருவரும் அடிக்கடி போட்டியின் போது சந்தித்துக் கொள்வோம். எங்களுக்குள் பெரிய அளவில் உரையாடல்கள் நிகழ்ந்தது கிடையாது. நான் நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற செய்தியில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. அது வதந்தி தான். இவ்வாறு மனு பாகர் கூறினார்.
மனுபாகர் தந்தை சொல்வது என்ன?
''மனு பாகருக்கு திருமணம் செய்யும் வயது இன்னும் வரவில்லை. அவர் இன்னும் சிறிய குழந்தை தான். நாங்கள் திருமணம் குறித்து எல்லாம் யோசிக்கவே இல்லை. மனு பாகரின் தாய், நீரஜ் சோப்ராவை அவருடைய மகன் போல் நினைப்பார். இதனால் அந்த செய்திகளில் உண்மை இல்லை'' என மனுபாகரின் தந்தை ராம்கிஷன் தெரிவித்தார்.