போதை ஒழிப்பை வலியுறுத்தி தங்கவயலில் மாரத்தான் ஓட்டம்
போதை ஒழிப்பை வலியுறுத்தி தங்கவயலில் மாரத்தான் ஓட்டம்
ADDED : மார் 10, 2025 12:27 AM

தங்கவயல்: போதைப்பொருள் ஒழிப்பு வலியுறுத்தி, 'தங்கவயல் போலீஸ் ரன்' எனும் மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.
தங்கவயல் மாவட்ட போலீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ராபர்ட்சன்பேட்டை கிளை இணைந்து நேற்று மாரத்தான் ஓட்டத்தை நடத்தினர். இதில் போலீசார் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு மட்டுமின்றி அனைவரின் உடல் நலன் கருதியும் நடத்தப்பட்டது.
மூத்த சிவில் நீதிபதி முஜாபர் மஞ்சரி கொடி அசைத்து துவக்கி வைத்து பேசுகையில், ''போதை பொருள் பயன்படுத்துவது அபாயகரமானது.
''இது மரணத்தை ஏற்படுத்தும். அரசு, பொது நல அமைப்புகள் ஒருங்கிணைந்து போதைப் பொருளை ஒழிக்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு தேவை. போதைப்பொருளை தவிர்த்தால் தான், இளைய சமுதாயம் முன்னேறும்,'' என்றார்.
தங்கவயல் எஸ்.பி., கே.எம்.சாந்தராஜு பேசுகையில், ''இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் போதைப் பொருள் விற்பனை தடுக்கப்படும்.
பொதுமக்கள்
''நகரம் மட்டுமின்றி, கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும். இதன் விற்பனையை தடுக்க பொதுமக்கள், போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும்,'' என்றார்.
'போலீஸ் ரன்' மாரத்தான் ஓட்டம், ராபர்ட்சன்பேட்டை நகராட்சி மைதானத்தில் துவங்கி சுராஜ்மல் சதுக்கம், அம்பேத்கர் சாலை, உரிகம் ரயில்வே நிலையம், என்.டி., பிளாக் முருகன் கோவில், சாம்பியன் ரீப் ஹைகிரவுண்ட், கல்லறை சதுக்கம், டாக்டர் செல்டானா சதுக்கம் வழியாக மீண்டும் நகராட்சி மைதானத்தை அடைந்தது.
வங்கி மேலாளர் மோகன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா, அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர் நரசிம்மமூர்த்தி, தங்கவயல் பத்திரிகையாளர் சங்கத்தலைவர் துரையரசு, டி.எஸ்.பி., பாண்டுரங்கா உட்பட பலர் பங்கேற்றனர்.
பரிசளிப்பு
இதில் பங்கேற்றோர் திறன் அறிந்து, தேர்வு செய்யப்பட்டனர். மாரத்தானில் வெற்றி பெற்ற, 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சேத்தன்; 50 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் சாகர் சந்திர பிரசாத், சஞ்சய் எஸ்.மகேந்திரா, ராமமூர்த்தி; பெண்கள் பிரிவில் சுனிதா அந்தினி, பரிமளா, விஜயலட்சுமி ஆகியோருக்கு எஸ்.பி., சாந்தராஜு பரிசுகள் வழங்கினார்.
மாரத்தான் ஓட்டத்தில், 72 வயது முதியவர் கமல்ராஜ் பங்கேற்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.