மே. வங்கத்தில் வெயிலை சமாளிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறல்
மே. வங்கத்தில் வெயிலை சமாளிக்க முடியாமல் வேட்பாளர்கள் திணறல்
ADDED : மே 05, 2024 12:00 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், அங்கு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதை சமாளிக்க முடியாமல் பழச்சாறு மற்றும் தண்ணீரை மட்டும் அருந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 42 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக அடுத்த மாதம் 1 வரை லோக்சபா தேர்தல் நடக்கிறது.
இதில், ஆறு தொகுதிகளுக்கு முதல் இரண்டு கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில், மல்தாஹா உத்தர், மல்தாஹா தக் ஷிண், ஜான்கிபூர், முர்ஷிதாபாத் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.
இந்நிலையில், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் வெயில் கொளுத்தி வருகிறது.
கடந்த 30ம் தேதி கோல்கட்டாவில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான வெயில் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திரவ உணவையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.
அசன்சோல் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் அலுவாலியா, 73, கூறுகையில், ''தினமும் காலை, மாலை என நான்கு மணிநேரம் பிரசாரம் செய்கிறேன். சில சமயம் நான் பிரசாரம் மேற்கொள்ளும் திறந்தவெளி வாகனத்தின் கம்பியை என்னால் பிடிக்க முடியாது.
''அந்த அளவுக்கு அதில் சூடு இருக்கும். வெயிலை சமாளிக்க தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை மட்டுமே நான் அருந்துகிறேன்,'' என்றார்.
கோல்கட்டாவின் டம்டம் தொகுதியில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் சவுகதா ராய் கூறுகையில், ''வெப்பத்தை சமாளிக்க வங்காள கைத்தறி புடவைகளையே அணிகிறேன்.
''வெயில் காரணமாக ஏற்படும் உடலின் நீரிழப் பை சமாளிக்க தண்ணீர், குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவற்றை மட்டுமே அருந்துகிறேன்,'' என கூறினார்.
பிற கட்சி வேட்பாளர்களும், வெயிலை சமாளிக்க அதிகாலையிலும், இரவிலுமே ஓட்டுச் சேகரிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்.
இங்குள்ள பல பகுதிகளில், சமீபகாலமாக 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் பதிவாவதால், வெயிலுடன் இணைந்து அனல் பறக்கும் பிரசாரங்களை வேட்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.