ADDED : செப் 07, 2024 07:33 PM
புதுடில்லி:நரைனா- ராஜா கார்டன் மாயாபுரி ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்புப் பணி நடப்பதால் ஒரு மாதத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகரப் போக்குவரத்துப் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாயாபுரி ரயில்வே மேம்பாலத்தில் பொதுப்பணித் துறையினர் சீரமைப்புப் பணியை துவக்கியுள்ளனர்.
இந்தப் பணிகள் முடிய 30 நாட்கள் ஆகும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. எனவே, மாயாபுரி மேம்பாலம் ஒரு மாதத்துக்கு மூடப்பட்டுள்ளது.
தவுலா குவான் மற்றும் நரைனாவில் இருந்து ராஜா கார்டன் செல்லும் வாகனங்கள் மேம்பாலம் துவங்கும் இடத்திலிருந்து சர்வீஸ் சாலையில் சென்று மாயாபுரி சவுக் சிக்னல் வழியாக செல்லலாம்.
மேலும், இந்தப் பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மருத்துவமனை, பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் செல்வோர் முன்கூட்டியே புறப்படும் வகையில் தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.